காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Wednesday, July 31, 2013

காதல் பரிசு



என் மனதிற்கு
இதமாய் நீ

உனக்குப் பரிசாய்
என் காதல்!

Thursday, July 25, 2013

காதல் பித்து













காதல் பித்துப் பிடித்த
உன் மனதைத்
தெளிய வைக்க என்னிடம்
முத்தங்கள் கேட்கிறாய்

என் உதடுகள் உன்
கன்னம் தொடும் வேளையில்
என் மனதிற்கு
பித்துப் பிடிக்கும் என்பதை
அறிய மாட்டாயோ நீ!

Wednesday, July 24, 2013

கொலுசு

எனக்கு எதிரியே
என் கொலுசுதான்

எப்போதெல்லாம் உனக்குத்
தெரியாமல் பின்னே வந்து
உன்னைக் கட்டிக்கொள்ள
நினைக்கிறேனோ
அப்போதெல்லாம் சினுங்கி
என் ஆசைகளைப்
பாழாக்கி விடுகிறது.

Monday, July 22, 2013

கனவில் நீ



தூக்கத்திலும்
வெட்கப்பட்டு முகம்
சிவக்கிறேன்

கனவில் நீ!

காதல்


மழை வருகிறதென்று
மொட்டைமாடியில் காயபோட்ட
துணிகளை எடுக்க
ஓடி வருகையில்
நீ முகம் துடைத்த என்
கைக்குட்டையில் மட்டும்
காதல் சொட்டிக் கொண்டிருக்கிறது

Friday, July 19, 2013

குறும்புத்தனம்

நான் குறும்பாக பேசும்போதெல்லாம்
எங்கிருந்து வந்தது இந்தக்
குறும்புத்தனம் என்று செல்லமாய்
என் காதைத் திருகுகிறாய்

நீ இப்படி என் காதைத்
திருக வேண்டுமென்பதற்காக
கற்றுக் கொண்டதுதானே
இந்தக் குறும்புத்தனங்களெல்லாம்

Tuesday, July 16, 2013

காதல் மழை

அன்றொருநாள் உன்னுடன் மழையில் விளையாடினேன். இன்று என் மீது விழுந்துத் தெறிக்கும் ஒவ்வொரு மழைத் துளியிலும் உன் பிம்பம்.

உன் பிம்பம் கலையாமல் இருக்க மழைத்துளிகளைக் கைகளில் சேகரித்தேன்.

மனதில் அடைக்க வேண்டியவனைக் கைகளில் அடைக்க நினைக்கிறேயே என்று கோபித்துக்கொண்டு வழிந்தோடியது மழைநீர்.

மறுநாள் உன்னைச் சந்திக்க வந்தேன்.

“நேற்று மழையில் நனைந்தாயா?” என்றாய்.

“ஆமாம். மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்” என்றேன் செல்லக் குறும்போடு.

“ஓஹோ. என் ஜுரத்திற்கு நீதான் காரணமா?” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டாய்.

“உனக்கு ஜுரமா? பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியலையே” சந்தேகமாய்ப் பார்த்தேன்.

“என்ன சந்தேகப் பார்வை இது? வேண்டுமென்றால் நீயே பார்” என்று என்னைக் கட்டிக்கொண்டாய்.

உன் காதோரமாய் மெதுவாய்ச் சொன்னேன். உனக்கு காதல் ஜூரம் என்று.

நீ புன்னகைத்தாய்.

அங்கே காதல் மழை பொழியத் துவங்கியது.

Wednesday, July 10, 2013

தோட்டத்தில் மலர்ந்த காதல்

சிறு வயதிலிருந்தே உன் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்.  அந்த அறியா பருவத்தில் இருவரும் சேர்ந்து உன் வீட்டு தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடுவோம். தோட்டத்து மலர்களை பறித்து பக்கத்து கோவிலிலுள்ள கண்ணனை அலங்கரிப்போம்.

பருவ வயது வந்ததும் இருவருக்குள்ளும் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

நான் தினமும் உன் தோட்டத்திற்கு பூ பறிக்க வந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னுடன் பூ பறிக்க நீ இப்போது இல்லை. 

உன் அறை ஜன்னலில் அவ்வப்போது ஒரு நிழலுருவம் கடப்பதை உணர்வேன். நான் திரும்பும் வேளையில் அவ்வுருவம் மாயமாய் மறைந்துவிடும். மாயக் கண்ணன் விளையாடுகிறான் என்பது என் மனதிற்கு புரியாதா என்ன?

ஒரு அழகிய மதி மயக்கும் மாலைப் பொழுதில்  வழக்கம் போல் பூ பறிக்க உன் தோட்டத்திற்கு வந்தேன். 

பூக்கூடை நிரம்பும் நேரத்தில் என் பின்னே அந்த நிழலுருவம். திரும்பிப் பார்த்தேன். என் மாயக் கண்ணன் நீயே தான். என் கண்கள் இந்த உண்மையை நம்ப மறுத்தது. நீயோ என்னைப் பார்த்து புன்னகைத்தாய். என் கையில் இருந்த பூக்கூடை நழுவியது. நீ அதை தாங்கிப் பிடித்தாய்.

“தினமும் இந்த பூக்களோடு என் மனதையும் சேர்த்துதானே பறித்துச் செல்கிறாய்” என்றாய் குறும்பாக.

பதில் பேச முடியாமல் திணறினேன்.

“உன் நினைவுகளை என்னிடம் விட்டு விட்டு பூக்களை மட்டும் தான் தினமும் எடுத்துச் செல்கிறாய் என்பதை அறிவாயா? என்னுடன் வா” என்று என் கைகளைப் பிடித்து கோவிலுக்கு இழுத்துச் சென்றாய்.

மீண்டும் இருவரும் சேர்ந்து கண்ணனை அலங்கரிக்க விரும்பினாய்.

அங்கு அலங்கரிக்கப்பட்டது கண்ணன் மட்டுமல்ல. நம் காதலும் தான்.

Tuesday, July 9, 2013

மன அழுத்தத்தை போக்கும் கிரீன் டீ

டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன்...

யாருக்குத்தான் இல்லை டென்ஷன்?

பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வயது குழந்தையின் கையிலிருந்து பொம்மையை பிடுங்கினால் அது கோபத்தில் கத்தி அலறுவதை கேட்டு நாம் தெறித்து ஓடிவிட வேண்டும். குழந்தைக்கே இத்தனை கோபம் என்றால் அன்றாட வாழ்வில் பற்பல போராட்டங்களை சந்தித்து வாழும் நமக்கு எத்தனை கோபங்கள், மன உலைச்சல்கள் இருக்கும்.

கோபத்தால் மனதில் பட்டதையெல்லாம் பேசி பிறரை நோகடிப்பது ஒரு வகை என்றால், எத்தனை கோபம் என்றாலும் அதை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே புதைப்பதாக நினைத்து மன அழுத்தத்தை வளர்ப்பது மற்றொரு வகை.

இந்த மன அழுத்தம் ஒரு மனிதனை படுத்தும் பாடு பெரும் பாடு. “அய்யோ அவனா? நல்லாத்தான் பேசிட்டே இருப்பான். நாமலும் விளையாட்டா ஏதாவது சொல்லுவோம். ஒன்னுமே இல்லாத அந்த விஷயத்துக்கு கோபப்பட்டு கத்துவான் பாருங்க” என்று ஒருவனை பைத்தியமாகவே நினைக்க வைத்து விடுகிறது இந்த மன அழுத்தம்.

இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?

தினமும் காலை அரைமணி நேரம் உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் மனதிற்கும், உடலுக்கும் நல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஆனால் இந்த அவசர உலகில் காலை எட்டு மணிக்கே அவசர அவசரமாய் ஆபிஸுக்கு கிளம்பி ஓடி, மாலை 6 அல்லது 7 மணிக்கு சோர்ந்து போய் வீடு திரும்புபவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஏது நேரம்?

உடற்பயிற்சி, நடைபயிற்சி ஏதுமின்றி இவர்களை மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டுவர ஒரு கப் கிரீன் டீ போதுமே. ”எனக்கு டீ எல்லாம் குடிக்க நேரமில்லை” என்று சொல்லி ஓடுபவர்கள் எவரும் இல்லை.  தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோபத்தை குறைத்து மன அழுத்தத்தை மட்டுமா போக்குகிறது இந்த டீ? இல்லை. ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமனை குறைக்கிறது. மேனிக்கு பொலிவு தருவதோடு தோல்களில் சுருக்கம் விழுவதை தவிர்த்து இளமையைத் காக்கிறது.

இனி உங்கள் வீட்டில் யாரேனும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருந்தால் பதிலுக்கு பதில் பேசாமல் அவருக்கு ஒரு கப் டீ போட்டு கொடுங்கள். உங்கள்  பிரச்னைகள் விரைவில் தீர்வுக்கு வந்துவிடும்.

Saturday, July 6, 2013

வெட்கம்


உன் கண்கள் சொல்லும்
காதல் கவிதைகளுக்கு அர்த்தம்
தேடும் பேதையாகவே 
இன்னமும் இருக்கிறேன் நான்

அதன் அர்த்தம் புரியும்
வேளையில் என் கண்களும்
கவி பாடுமோ

இல்லை வெட்கத்தில்
என் கைகள்
கண் மூடுமோ!