காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Wednesday, April 30, 2014

தாய் பாசம்

ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனைவி இரண்டாவது தாயாக இருப்பாள் என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நம் வாழ்வில் எனக்கு இரண்டாவது தாயாக இருப்பது என் கணவனாகிய நீயடா.

தாய் தன் குழந்தையை அரவணைத்து பத்திரமாக காத்துக் கொள்வாள். அதைப்போல நீ என்னை அரவணைத்து காத்து வருகிறாய். நான் மட்டும் குறைந்தவளா என்ன?

என் அம்மாவிடம் செல்லம் கொஞ்சியதை விட உன்னிடம் அதிகமாக செல்லம் கொஞ்சித் தீர்க்கிறேன்.

இரவில் உன் மார்பில் தலை சாய்க்காவிட்டால் என் கண்கள் உறங்க மறுத்து அடம் பிடிக்கிறது. உன் மார்புதான் எனக்கு தலையணையாம்.

தினமும் காலையில் வேலைக்குச் செல்லும் முன், கடவுள் முன் நின்று என் நெற்றியில் நீ வைத்துச் செல்லும் திருநீரிலும் கூட உன் தாய்ப்பாசம் கலந்திருக்கிறதடா.  காலை குளித்து முடித்து எனக்கு தலை துவட்டுவதிலிருந்து, இரவு என்னை உறங்க வைப்பது வரை எனக்கான அனைத்து வேலைகளையும் நீயே செய்ய விரும்புகிறாய்.

இத்தகைய செயல்களினால் நீ எனக்கு தாயாகத் தெரிகிறாயா இல்லை என்னை செல்லமாக “குழந்தை” என்று அழைக்கிறாயே அந்த வார்த்தையில்தான் தாயாகிப் போனாயா?