காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Wednesday, July 10, 2013

தோட்டத்தில் மலர்ந்த காதல்

சிறு வயதிலிருந்தே உன் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்.  அந்த அறியா பருவத்தில் இருவரும் சேர்ந்து உன் வீட்டு தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடுவோம். தோட்டத்து மலர்களை பறித்து பக்கத்து கோவிலிலுள்ள கண்ணனை அலங்கரிப்போம்.

பருவ வயது வந்ததும் இருவருக்குள்ளும் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

நான் தினமும் உன் தோட்டத்திற்கு பூ பறிக்க வந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னுடன் பூ பறிக்க நீ இப்போது இல்லை. 

உன் அறை ஜன்னலில் அவ்வப்போது ஒரு நிழலுருவம் கடப்பதை உணர்வேன். நான் திரும்பும் வேளையில் அவ்வுருவம் மாயமாய் மறைந்துவிடும். மாயக் கண்ணன் விளையாடுகிறான் என்பது என் மனதிற்கு புரியாதா என்ன?

ஒரு அழகிய மதி மயக்கும் மாலைப் பொழுதில்  வழக்கம் போல் பூ பறிக்க உன் தோட்டத்திற்கு வந்தேன். 

பூக்கூடை நிரம்பும் நேரத்தில் என் பின்னே அந்த நிழலுருவம். திரும்பிப் பார்த்தேன். என் மாயக் கண்ணன் நீயே தான். என் கண்கள் இந்த உண்மையை நம்ப மறுத்தது. நீயோ என்னைப் பார்த்து புன்னகைத்தாய். என் கையில் இருந்த பூக்கூடை நழுவியது. நீ அதை தாங்கிப் பிடித்தாய்.

“தினமும் இந்த பூக்களோடு என் மனதையும் சேர்த்துதானே பறித்துச் செல்கிறாய்” என்றாய் குறும்பாக.

பதில் பேச முடியாமல் திணறினேன்.

“உன் நினைவுகளை என்னிடம் விட்டு விட்டு பூக்களை மட்டும் தான் தினமும் எடுத்துச் செல்கிறாய் என்பதை அறிவாயா? என்னுடன் வா” என்று என் கைகளைப் பிடித்து கோவிலுக்கு இழுத்துச் சென்றாய்.

மீண்டும் இருவரும் சேர்ந்து கண்ணனை அலங்கரிக்க விரும்பினாய்.

அங்கு அலங்கரிக்கப்பட்டது கண்ணன் மட்டுமல்ல. நம் காதலும் தான்.

1 comment: