காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Wednesday, May 7, 2014

வாடா போடா

திருமணத்திற்கு முன் எத்தனை மரியாதையாய் உன்னை "வாங்க போங்க" என்று அழைத்துக் கொண்டிருந்தேன். 

ஒரு நாள் மரியாதையைத் தாங்கிக் கொள்ள முடியாதவனைப் போல "இடை இடையே வாடா போடா என்றும் பேசுடி" என்றாய்.

ஆரம்பத்தில் உன்னை "வாடா போடா" என்று பேச நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.

இப்பொழுது நித்தமும் உன்னை "வாடா போடா" என்று உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என்னிடம் "நான் உன் புருஷன் டி.. இடை இடையே கொஞ்சம் மரியாதையும் கொடுத்து பேசுடி" என்று பாவமாய் கேட்கிறாய்.

"என்னை மன்னித்துவிடு. உன்னை வாடா போடா என்று பேசும் பொழுதுதான் நமக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிப்பதாக உணர்கிறேன். இப்பொழுது சொல். உன்னை நான் எப்படி அழைப்பது?" என்றேன்.

என்னை இழுத்து அணைத்துக் கொண்டாய்.

"அய்யோ விடுடா" என்றேன்.

"ஒஹோ.. இதுதான் அந்த நெருக்கமா?" என்று புன்னகைத்தாய்.

வெட்கத்தில் தலை குனிந்தேன்.

Sunday, May 4, 2014

ஊடல்

கணவன், மனைவி இருவருக்கும் நடுவே காதலை அதிகப்படுத்துவது அவர்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு ஊடல்கள்தான். எனக்கும் உன் மீது காதலை அதிகப்படுத்தியது நமக்குள் நடந்த ஒரு ஊடல்தான் என்பதை அறிவாயா நீ?

ஒரு நாள் நீ செய்த சிறு தவறுக்காக உன்னிடம் கோபித்துக்கொண்டு, அன்று முழுவதும் உன்னுடன் பேசாமல் மெளனம் சாதித்தேன்.

என் மெளனம் உன் மனதை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருந்தது என்பதையும், உனக்கு என் மீது இருந்த ஆழமான காதலையும் அன்று இரவு தூக்கத்தில் உணர்ந்தேனடா.

நடு இரவில், உறக்கத்தில் நான் ஆழ்ந்திருக்க ஏதோ ஒரு உளறல் சத்தம். எழுந்து பார்க்கையில் நீ என்னை இறுக்கிப் பிடித்திருந்தாய்.

‘என்னை விட்டு போய்விடாதே’ என்று ஏதோ உளறிக்கொட்டினாய்.

உன்னை தட்டி எழுப்பினேன்.

உறக்கம் கலைந்த நீ, ‘கனவு… நீ என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறாய்… என்னை விட்டு எங்கும் போய்விடாதே’ என்று என்னைக் கட்டிக்கொண்டாய்.

என் கோபங்கள் அனைத்தும் கண்ணீரில் கரைந்து காணாமல் போனது.

‘உன்னை விட்டு நான் எங்கே போய்விடுவேன். இனி இதுபோல் உன்னிடம் பேசாமல் இருக்க மாட்டேன்’ என்று உன்னிடம் மன்னிப்பு கேட்டேன்.

என் மீது உனக்கு எத்தனை காதல் இருந்தால் என் சிறு மெளனத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவனாய் இருப்பாய் நீ.

அன்று முதல் உன் மீது எனக்கு இருந்த காதல் பல மடங்காய் கூடிப் போனதடா.