காதலுக்கும் வாசம் உண்டு

காதலுக்கும் வாசம் உண்டு

Wednesday, May 7, 2014

வாடா போடா

திருமணத்திற்கு முன் எத்தனை மரியாதையாய் உன்னை "வாங்க போங்க" என்று அழைத்துக் கொண்டிருந்தேன். 

ஒரு நாள் மரியாதையைத் தாங்கிக் கொள்ள முடியாதவனைப் போல "இடை இடையே வாடா போடா என்றும் பேசுடி" என்றாய்.

ஆரம்பத்தில் உன்னை "வாடா போடா" என்று பேச நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.

இப்பொழுது நித்தமும் உன்னை "வாடா போடா" என்று உரிமைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என்னிடம் "நான் உன் புருஷன் டி.. இடை இடையே கொஞ்சம் மரியாதையும் கொடுத்து பேசுடி" என்று பாவமாய் கேட்கிறாய்.

"என்னை மன்னித்துவிடு. உன்னை வாடா போடா என்று பேசும் பொழுதுதான் நமக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிப்பதாக உணர்கிறேன். இப்பொழுது சொல். உன்னை நான் எப்படி அழைப்பது?" என்றேன்.

என்னை இழுத்து அணைத்துக் கொண்டாய்.

"அய்யோ விடுடா" என்றேன்.

"ஒஹோ.. இதுதான் அந்த நெருக்கமா?" என்று புன்னகைத்தாய்.

வெட்கத்தில் தலை குனிந்தேன்.

Sunday, May 4, 2014

ஊடல்

கணவன், மனைவி இருவருக்கும் நடுவே காதலை அதிகப்படுத்துவது அவர்களுக்கு இடையே நடக்கும் சிறு சிறு ஊடல்கள்தான். எனக்கும் உன் மீது காதலை அதிகப்படுத்தியது நமக்குள் நடந்த ஒரு ஊடல்தான் என்பதை அறிவாயா நீ?

ஒரு நாள் நீ செய்த சிறு தவறுக்காக உன்னிடம் கோபித்துக்கொண்டு, அன்று முழுவதும் உன்னுடன் பேசாமல் மெளனம் சாதித்தேன்.

என் மெளனம் உன் மனதை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருந்தது என்பதையும், உனக்கு என் மீது இருந்த ஆழமான காதலையும் அன்று இரவு தூக்கத்தில் உணர்ந்தேனடா.

நடு இரவில், உறக்கத்தில் நான் ஆழ்ந்திருக்க ஏதோ ஒரு உளறல் சத்தம். எழுந்து பார்க்கையில் நீ என்னை இறுக்கிப் பிடித்திருந்தாய்.

‘என்னை விட்டு போய்விடாதே’ என்று ஏதோ உளறிக்கொட்டினாய்.

உன்னை தட்டி எழுப்பினேன்.

உறக்கம் கலைந்த நீ, ‘கனவு… நீ என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறாய்… என்னை விட்டு எங்கும் போய்விடாதே’ என்று என்னைக் கட்டிக்கொண்டாய்.

என் கோபங்கள் அனைத்தும் கண்ணீரில் கரைந்து காணாமல் போனது.

‘உன்னை விட்டு நான் எங்கே போய்விடுவேன். இனி இதுபோல் உன்னிடம் பேசாமல் இருக்க மாட்டேன்’ என்று உன்னிடம் மன்னிப்பு கேட்டேன்.

என் மீது உனக்கு எத்தனை காதல் இருந்தால் என் சிறு மெளனத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியாதவனாய் இருப்பாய் நீ.

அன்று முதல் உன் மீது எனக்கு இருந்த காதல் பல மடங்காய் கூடிப் போனதடா.

Wednesday, April 30, 2014

தாய் பாசம்

ஒவ்வொரு ஆணுக்கும் தன் மனைவி இரண்டாவது தாயாக இருப்பாள் என்றுதான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் நம் வாழ்வில் எனக்கு இரண்டாவது தாயாக இருப்பது என் கணவனாகிய நீயடா.

தாய் தன் குழந்தையை அரவணைத்து பத்திரமாக காத்துக் கொள்வாள். அதைப்போல நீ என்னை அரவணைத்து காத்து வருகிறாய். நான் மட்டும் குறைந்தவளா என்ன?

என் அம்மாவிடம் செல்லம் கொஞ்சியதை விட உன்னிடம் அதிகமாக செல்லம் கொஞ்சித் தீர்க்கிறேன்.

இரவில் உன் மார்பில் தலை சாய்க்காவிட்டால் என் கண்கள் உறங்க மறுத்து அடம் பிடிக்கிறது. உன் மார்புதான் எனக்கு தலையணையாம்.

தினமும் காலையில் வேலைக்குச் செல்லும் முன், கடவுள் முன் நின்று என் நெற்றியில் நீ வைத்துச் செல்லும் திருநீரிலும் கூட உன் தாய்ப்பாசம் கலந்திருக்கிறதடா.  காலை குளித்து முடித்து எனக்கு தலை துவட்டுவதிலிருந்து, இரவு என்னை உறங்க வைப்பது வரை எனக்கான அனைத்து வேலைகளையும் நீயே செய்ய விரும்புகிறாய்.

இத்தகைய செயல்களினால் நீ எனக்கு தாயாகத் தெரிகிறாயா இல்லை என்னை செல்லமாக “குழந்தை” என்று அழைக்கிறாயே அந்த வார்த்தையில்தான் தாயாகிப் போனாயா?

Wednesday, November 13, 2013

ஐ லவ் யூ

குறும்புத்தனத்தின் மொத்த உருவமடா நீ.

நான் கண்ணனின் பக்தை. அதனால் தான் கண்ணன் அவனைப் போலவே குறும்புத்தனத்தில் சிறந்த உன்னை எனக்கு கணவனாக அனுப்பப் போகிறானோ?

நீ கொடுக்கும் அன்புத் தொல்லைகளோ ஏராளம்.

காதலை சொல்ல இடமில்லாதவனைப் போல சாலையின் நடுவே நின்று என்னைக் காதலிப்பதாக கத்துகிறாய். 

நான் பேசும் பொழுது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் நடுவே என்னை இடைமறித்து “ஐ லவ் யூ” என்கிறாய்.

பேசாமல் மெளனமாய் நின்றால் “நீ அமைதியாக இருந்தாலும் ஐ லவ் யூ” என்கிறாய்.

அய்யோ... என் காதல் பைத்தியமே...

உன் காதல் இம்சையில் என்னையே நான் மறந்து போகிறேனடா.

நேற்று வீட்டை விட்டு வெளியே கிளம்புகையில் என் செருப்புக்கு பதிலாக வேறு செருப்பை அணிந்து சென்றேன். 

என்னிடம் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சரியாக கவனிக்காமல் சம்மந்தமே இல்லாத பதில்களைச் சொல்லி கேலி பேச்சுக்கு ஆளாகினேன்.

நீ சொல்லும் ”ஐ லவ் யூ” என் காதுகளை விட்டு நீங்க மறுத்து, என் வேலைகளை இம்சிக்கிறது.

இப்போதே இப்படியென்றால் திருமணத்திற்குப் பின் உன்னை எப்படி சமாளிப்பது என்பதே என் ஒரே கேள்வி.

பதில் சொல்வாயா?

இல்லை இதற்கும் “ஐ லவ் யூ” சொல்லி என் வாயை அடைக்கப் போகிறாயா? 

Tuesday, October 22, 2013

சண்டை













நான் உன்னிடம்
சண்டை போட்டுக்கொண்டே இருந்தால்
என்ன செய்வாய் என்று கேட்டாய்

சண்டையின் முடிவில்
உனக்கொரு முத்தம்
தருவேன் என்றேன்

அதற்காக இப்படியா தினமும்
என்னை வம்பிலுத்து
சண்டைப் போட்டுக்கொண்டே இருப்பது

Saturday, October 12, 2013

காதல் அட்டகாசங்கள்

ஒரு நாள் என்னைக் கட்டாயப்படுத்தி உன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாய்.

உனக்கு நான் தான் காபி போடுவேன் என்று அடம்பிடித்தாய்.

நீ காபி போடும் பொழுது நான் உடனிருக்கக் கூடாது என்று நிபந்தனையும் விதித்தாய். 

உன் கண்களைப் பார்த்தேன். காதல் உன் கண்களில் நின்று என்னை எட்டிப் பார்த்துக் கேலியாய் சிரித்தது.

உன் காதல் விளையாட்டு தொடங்கிவிட்டது என்று என் காதலுக்கு புரியாதா என்ன. 

வழக்கம் போல் என்னிடம் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு காபியில் வேண்டுமென்றே சர்க்கரைப் போட மறந்தாய். 

நான் எதுவும் சொல்லாமல் குடிப்பதைப் பார்த்துப் பதறிப்போய் “அய்யோ அதில் சர்க்கரை போடவில்லையடி” என்றாய்.

”அட மடையா... சர்க்கரைப் போடவில்லையென்றால் என்ன?? உன் காதலைக் கலந்து போட்ட காபி என்ன கசக்கவா போகிறது?  இதைப்போல ஒரு காபியை இதுவரை நான் குடித்ததே இல்லை தெரியுமா. திருமணத்திற்குப் பிறகு தினமும் இப்படியே உன் காதலை கலந்து எனக்கு காபி போட்டுக் கொடுப்பாயா?” என்றேன். 

உன் காதல் என்ன நினைத்ததோ தெரியவில்லை. உன்னை என் பக்கமாக தள்ளி என்னை அணைத்துக்கொள்ளச் செய்தது. 

வர வர நீயும், உன் காதலும் செய்யும் அட்டகாசங்கள் தாங்க முடிவதில்லை.

Wednesday, September 25, 2013

கவிதை புத்தகம்



கவிதை புத்தகம் வாசிக்கையில்
எந்தெந்த கவிதைகளில்
எழுத்துக்களுக்குப் பதிலாக
உன் உருவம் தெரிகிறதோ
அவைகள் தான் காதல்
கவிதைகளோ!

தடுமாற்றம்



எப்போது உன் கண்களைப்
பார்த்து என் இதயம்
தடுமாறி அதன்
துடிப்பு அதிகமானதோ
அந்தத் துடிப்பில்
தடுமாறிப் பிறந்ததே
என் காதல்.

Tuesday, September 24, 2013

உன் பெயர்



எனக்கு உன் மீது
காதலென்றால் என்
பேனாவிற்கு உன்
பெயர் மீது காதல்

எத்தனை முறைதான்
சலிக்காமல் உன் பெயரை
எழுதித் தீர்க்கிறது.

Monday, September 23, 2013

நினைவுகள்



வானில் சிதறிக் கிடக்கும்
நட்சத்திரங்களைப் போல
என் மனதில்
சிதறிக் கிடக்கும் உன்
நினைவுகள்தான் என்
காதலை ஒளிரச் செய்கிறது.

Saturday, September 21, 2013

முதல் குழந்தை


நீதான்  என் முதல்
குழந்தை என்றேன்

அதற்காக இப்படியா
நித்தமும் என் காதலோடு
விளையாடிக் கொண்டே இருப்பது

Wednesday, July 31, 2013

காதல் பரிசு



என் மனதிற்கு
இதமாய் நீ

உனக்குப் பரிசாய்
என் காதல்!

Thursday, July 25, 2013

காதல் பித்து













காதல் பித்துப் பிடித்த
உன் மனதைத்
தெளிய வைக்க என்னிடம்
முத்தங்கள் கேட்கிறாய்

என் உதடுகள் உன்
கன்னம் தொடும் வேளையில்
என் மனதிற்கு
பித்துப் பிடிக்கும் என்பதை
அறிய மாட்டாயோ நீ!

Wednesday, July 24, 2013

கொலுசு

எனக்கு எதிரியே
என் கொலுசுதான்

எப்போதெல்லாம் உனக்குத்
தெரியாமல் பின்னே வந்து
உன்னைக் கட்டிக்கொள்ள
நினைக்கிறேனோ
அப்போதெல்லாம் சினுங்கி
என் ஆசைகளைப்
பாழாக்கி விடுகிறது.

Monday, July 22, 2013

கனவில் நீ



தூக்கத்திலும்
வெட்கப்பட்டு முகம்
சிவக்கிறேன்

கனவில் நீ!

காதல்


மழை வருகிறதென்று
மொட்டைமாடியில் காயபோட்ட
துணிகளை எடுக்க
ஓடி வருகையில்
நீ முகம் துடைத்த என்
கைக்குட்டையில் மட்டும்
காதல் சொட்டிக் கொண்டிருக்கிறது

Friday, July 19, 2013

குறும்புத்தனம்

நான் குறும்பாக பேசும்போதெல்லாம்
எங்கிருந்து வந்தது இந்தக்
குறும்புத்தனம் என்று செல்லமாய்
என் காதைத் திருகுகிறாய்

நீ இப்படி என் காதைத்
திருக வேண்டுமென்பதற்காக
கற்றுக் கொண்டதுதானே
இந்தக் குறும்புத்தனங்களெல்லாம்

Tuesday, July 16, 2013

காதல் மழை

அன்றொருநாள் உன்னுடன் மழையில் விளையாடினேன். இன்று என் மீது விழுந்துத் தெறிக்கும் ஒவ்வொரு மழைத் துளியிலும் உன் பிம்பம்.

உன் பிம்பம் கலையாமல் இருக்க மழைத்துளிகளைக் கைகளில் சேகரித்தேன்.

மனதில் அடைக்க வேண்டியவனைக் கைகளில் அடைக்க நினைக்கிறேயே என்று கோபித்துக்கொண்டு வழிந்தோடியது மழைநீர்.

மறுநாள் உன்னைச் சந்திக்க வந்தேன்.

“நேற்று மழையில் நனைந்தாயா?” என்றாய்.

“ஆமாம். மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்” என்றேன் செல்லக் குறும்போடு.

“ஓஹோ. என் ஜுரத்திற்கு நீதான் காரணமா?” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டாய்.

“உனக்கு ஜுரமா? பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியலையே” சந்தேகமாய்ப் பார்த்தேன்.

“என்ன சந்தேகப் பார்வை இது? வேண்டுமென்றால் நீயே பார்” என்று என்னைக் கட்டிக்கொண்டாய்.

உன் காதோரமாய் மெதுவாய்ச் சொன்னேன். உனக்கு காதல் ஜூரம் என்று.

நீ புன்னகைத்தாய்.

அங்கே காதல் மழை பொழியத் துவங்கியது.

Wednesday, July 10, 2013

தோட்டத்தில் மலர்ந்த காதல்

சிறு வயதிலிருந்தே உன் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்.  அந்த அறியா பருவத்தில் இருவரும் சேர்ந்து உன் வீட்டு தோட்டத்தில் கண்ணாமூச்சி விளையாடுவோம். தோட்டத்து மலர்களை பறித்து பக்கத்து கோவிலிலுள்ள கண்ணனை அலங்கரிப்போம்.

பருவ வயது வந்ததும் இருவருக்குள்ளும் சிறு இடைவெளி ஏற்பட்டது. 

நான் தினமும் உன் தோட்டத்திற்கு பூ பறிக்க வந்து கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் என்னுடன் பூ பறிக்க நீ இப்போது இல்லை. 

உன் அறை ஜன்னலில் அவ்வப்போது ஒரு நிழலுருவம் கடப்பதை உணர்வேன். நான் திரும்பும் வேளையில் அவ்வுருவம் மாயமாய் மறைந்துவிடும். மாயக் கண்ணன் விளையாடுகிறான் என்பது என் மனதிற்கு புரியாதா என்ன?

ஒரு அழகிய மதி மயக்கும் மாலைப் பொழுதில்  வழக்கம் போல் பூ பறிக்க உன் தோட்டத்திற்கு வந்தேன். 

பூக்கூடை நிரம்பும் நேரத்தில் என் பின்னே அந்த நிழலுருவம். திரும்பிப் பார்த்தேன். என் மாயக் கண்ணன் நீயே தான். என் கண்கள் இந்த உண்மையை நம்ப மறுத்தது. நீயோ என்னைப் பார்த்து புன்னகைத்தாய். என் கையில் இருந்த பூக்கூடை நழுவியது. நீ அதை தாங்கிப் பிடித்தாய்.

“தினமும் இந்த பூக்களோடு என் மனதையும் சேர்த்துதானே பறித்துச் செல்கிறாய்” என்றாய் குறும்பாக.

பதில் பேச முடியாமல் திணறினேன்.

“உன் நினைவுகளை என்னிடம் விட்டு விட்டு பூக்களை மட்டும் தான் தினமும் எடுத்துச் செல்கிறாய் என்பதை அறிவாயா? என்னுடன் வா” என்று என் கைகளைப் பிடித்து கோவிலுக்கு இழுத்துச் சென்றாய்.

மீண்டும் இருவரும் சேர்ந்து கண்ணனை அலங்கரிக்க விரும்பினாய்.

அங்கு அலங்கரிக்கப்பட்டது கண்ணன் மட்டுமல்ல. நம் காதலும் தான்.

Tuesday, July 9, 2013

மன அழுத்தத்தை போக்கும் கிரீன் டீ

டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன்...

யாருக்குத்தான் இல்லை டென்ஷன்?

பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வயது குழந்தையின் கையிலிருந்து பொம்மையை பிடுங்கினால் அது கோபத்தில் கத்தி அலறுவதை கேட்டு நாம் தெறித்து ஓடிவிட வேண்டும். குழந்தைக்கே இத்தனை கோபம் என்றால் அன்றாட வாழ்வில் பற்பல போராட்டங்களை சந்தித்து வாழும் நமக்கு எத்தனை கோபங்கள், மன உலைச்சல்கள் இருக்கும்.

கோபத்தால் மனதில் பட்டதையெல்லாம் பேசி பிறரை நோகடிப்பது ஒரு வகை என்றால், எத்தனை கோபம் என்றாலும் அதை வெளியே காட்டாமல் மனதிற்குள்ளேயே புதைப்பதாக நினைத்து மன அழுத்தத்தை வளர்ப்பது மற்றொரு வகை.

இந்த மன அழுத்தம் ஒரு மனிதனை படுத்தும் பாடு பெரும் பாடு. “அய்யோ அவனா? நல்லாத்தான் பேசிட்டே இருப்பான். நாமலும் விளையாட்டா ஏதாவது சொல்லுவோம். ஒன்னுமே இல்லாத அந்த விஷயத்துக்கு கோபப்பட்டு கத்துவான் பாருங்க” என்று ஒருவனை பைத்தியமாகவே நினைக்க வைத்து விடுகிறது இந்த மன அழுத்தம்.

இதிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?

தினமும் காலை அரைமணி நேரம் உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடை பயிற்சி மேற்கொள்ளலாம். இதனால் மனதிற்கும், உடலுக்கும் நல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

ஆனால் இந்த அவசர உலகில் காலை எட்டு மணிக்கே அவசர அவசரமாய் ஆபிஸுக்கு கிளம்பி ஓடி, மாலை 6 அல்லது 7 மணிக்கு சோர்ந்து போய் வீடு திரும்புபவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய ஏது நேரம்?

உடற்பயிற்சி, நடைபயிற்சி ஏதுமின்றி இவர்களை மன அழுத்தத்திலிருந்து வெளியே கொண்டுவர ஒரு கப் கிரீன் டீ போதுமே. ”எனக்கு டீ எல்லாம் குடிக்க நேரமில்லை” என்று சொல்லி ஓடுபவர்கள் எவரும் இல்லை.  தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கோபத்தை குறைத்து மன அழுத்தத்தை மட்டுமா போக்குகிறது இந்த டீ? இல்லை. ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் பருமனை குறைக்கிறது. மேனிக்கு பொலிவு தருவதோடு தோல்களில் சுருக்கம் விழுவதை தவிர்த்து இளமையைத் காக்கிறது.

இனி உங்கள் வீட்டில் யாரேனும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருந்தால் பதிலுக்கு பதில் பேசாமல் அவருக்கு ஒரு கப் டீ போட்டு கொடுங்கள். உங்கள்  பிரச்னைகள் விரைவில் தீர்வுக்கு வந்துவிடும்.